Format: Print
Publisher: தமிழ் திசை
பொங்கல் மலர் 2021 ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது மரபார்ந்த நம்பிக்கை. பொங்கல் தரும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் வெளியாகிறது இந்து தமிழ் ‘பொங்கல் மலர் 2021’. கரோனா ஊரடங்கு காரணமாக நம்மில் பெரும்பாலோர் வீட்டிலேயே அடைந்து கிடக்க நேரிட்ட நிலையில், இப்போதுதான் மக்கள் சிறிது சிறிதாகப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் நாம் சுற்றிப் பார்க்கக்கூடிய, பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த சித்திரத்தைத் தருகிறது பயணம் பகுதி. தமிழகத்தின் எல்லைக்குள் கேரள பாணியில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை, கொடைக்கானல் மலைவாசத்தலம் உருவான விதம், கேரளத்தின் முழப்பிழங்காடு ‘டிரைவ் இன்’ கடற்கரை, அதிகம் அறியப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைக் காடுகள், புகழ்பெற்ற நாவலாசிரியர் டான் பிரவுனின் பாதையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இத்தாலியப் பயணம், ஆப்பிரிக்கக் காட்டுயிர்கள் குறித்த பதிவுகள் ஆகியவை மனத்துக்குப் புத்துணர்வுமிக்க அனுபவத்தைத் தரும். ஆன்மிகப் பகுதியை சிறப்பிக்கும் வகையில் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய வகையில் மூத்த ஓவியர் ஆவுடையப்பனின் கைவண்ணத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணியில் கடவுளர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல் ஓவியர் நரேந்திர பாபு தேர்கள் வடிவில் பல்வேறு பாரம்பரிய ஆன்மிக அம்சங்களை ஓவியங்களாக வடித்துள்ளார். இவற்றுடன் சென்னையின் ஒரு பகுதி முழுக்க அம்மன் சிலைகளால் அலங்கரிக்கப்படும் திருவிழா, குற்றாலநாதர் கோயில், மாறுபட்ட வகையில் அமைந்துள்ள தேவாலயம், இஸ்லாமிய இறைத் தூதர் இப்றாஹிம் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. சினிமா பகுதியில் நடிகர் திலகம் சிவாஜியின் அறியப்படாத பயணம், திரைத் துறையில் ரஜினிகாந்தின் 45 ஆண்டுப் பயணம், கமல்ஹாசனின் 60 ஆண்டுப் பயணம் என முன்னணி நாயகர்களின் பயணங்களைப் பற்றி தனித்தனி கட்டுரைகள் அலசுகின்றன. தமிழகத்திலும் இந்தியாவிலும் எண்ணற்ற பழங்குடிகள் வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பண்பாடு, பாரம்பரிய அறிவு குறித்து நாம் அறிந்தது சொற்பமே. பழங்குடிகளின் வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன, பழங்குடிகளைக் குறித்த சிறப்புக் கட்டுரைகள். பழங்குடிகள் ஆய்வாளர் பகத் சிங்கின் கட்டுரை, தமிழகத்தின் முக்கியப் பழங்குடிகளான காணிகள், முதுவர் ஆகியோரைப் பற்றிய நேரடி அனுபவங்கள், மிசோரம் பழங்குடிகள், கர்னாக் நாடோடிகள், இந்தியாவில் வாழும் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் என நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் பழங்குடிகள் பற்றிய சித்திரங்களும் இப்பகுதியில் உண்டு. சமீப காலமாக கவனம் பெற்றுவரும் சுற்றுச்சூழல் துறை சார்ந்தும் ஒரு பகுதி இந்த மலரில் இடம்பெற்றுள்ளது. இளம் ஒளிப்படக் கலைஞர் ராம்நாத் சந்திரசேகரின் காடு குறித்த ஒளிப்படத் தொகுப்பு, பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்னின் கடல் மீன்கள் குறித்த கட்டுரை, பறவைகள் குறித்த கவிஞர் ஆசையின் கட்டுரை ஆகியவை இந்தப் பகுதியை அலங்கரிக்கின்றன. இந்தக் கட்டுரைகளும் சித்திரங்களும் மேம்பட்ட வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறோம்.