Format: Print
Publisher: தமிழ் திசை
சித்திரை மலர் 2022 தமிழ் ஆண்டுப் பிறப்பின் முதல் மாதமாக இருப்பது மட்டுமில்லாமல் மதுரை அழகர் கோவில் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், காமன் பண்டிகை ஆகிய விழாக்கள் நடைபெறும் மாதம் சித்திரை. ராமர், சூரிய பகவான், ராமானுஜர் ஆகியோர் அவதரித்த மாதமும்கூட. சித்திரையை சிறப்பிக்கும் வகையில் ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் உருவான வண்ணச் சித்திரங்கள் காட்சிப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. சென்னையில் உள்ள சிறப்புமிக்க மும்மதத் தலங்களின் காட்சி அழகை பாலச்சந்தர், யூசுஃப் மதியாவின் ஓவியங்கள் சிறைப்பிடித்துள்ளன. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பக் கலைச் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது பேராசிரியர் ஆ.சந்திரசேகரனின் ஒளிப்படங்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார் ஆகிய பெண் நாயன்மார்களின் பெருமைகளை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. கரோனா வைரஸ் பரவலின்போது தங்கள் ஆளுமைத்திறனால் மக்களையும் நாட்டையும் காப்பாற்றிய பெண் தலைவர்கள் குறித்து ‘மகத்தான மகளிர்’ பகுதிக் கட்டுரை அலசுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாஸிகளின் வதைமுகாமிலிருந்து தப்பிய ஒன்பது பெண்கள், சிறுமி ஆன் ஃபிராங்க், ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைத் தொடர்ந்து அமைதியைப் பரப்பிய சடாகோ சசாகி ஆகிய பெண் ஆளுமைகளைப் பற்றி மற்ற கட்டுரைகள் பேசுகின்றன. கோடைக்காலம் என்பது பயணங்களுக்கான காலம். அந்த வகையில் நீரின் கொண்டாட்டமான ஒகேனக்கல், நிலத்துக்கு வந்த பார்கடலைப் போன்ற தூத் சாகர் அருவி, தென் மாவட்டங்களின் அடையாளமான தேரிக்காடு பற்றிய கட்டுரைகள் அந்தப் பகுதிகளுக்கே நம்மை அழைத்துச்செல்கின்றன. மாணவர்களின் ஒளிப்படங்கள் வழியே அதிகம் வெளிச்சம் படாத வடசென்னை உலகத்தையும், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புகழ்பெற்ற நாகா மக்களின் இருவாச்சித் திருவிழா குறித்து ஒளிப்படக் கலைஞர் ஆர். மணிவண்ணனின் காட்சித்தொகுப்பும் கண்ணுக்கு விருந்து. கடந்த நூற்றாண்டில் தமிழின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த கவிமணி தேசிகவிநாயகத்தை ஆவணப்படுத்திய ஒளிப்படக் கலைஞர் ஆதிமூலபெருமாளின் படத்தொகுப்பு தனித்தன்மை கொண்டது. எழுத்தாளர் ஆதவன், கி.ராஜநாராயணன், வை. கோவிந்தன், ஆல்பெர் காம்யு, ஃபிரான்ஸ் காஃப்கா உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன இலக்கியம் பகுதிக் கட்டுரைகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மறைந்த தமிழ்த் திரையுலகின் முக்கியப் படைப்பாளிகளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நகைச்சுவை நடிகர் விவேக், வசனகர்த்தா கிரேஸி மோகன், இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், கே.வி. ஆனந்த் ஆகியோரைக் குறித்த நினைவுகளை மீட்டுகின்றன சினிமா கட்டுரைகள். மகா கலைஞன் சிவாஜியுடன் 70 நாட்கள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ். ராஜகுமாரனின் அனுபவம், தஞ்சாவூர்க் கவிராயர் நடத்திவரும் வழிப்போக்கருக்கான நூலகம், எழுத்தாளர் யூமா வாசுகியின் சிறார் கதை, செல்வ புவியரசனின் கவிதைகள் உள்ளிட்டவை புது வாசிப்பு அனுபவத்தை உறுதிப்படுத்தக்கூடியவை.