தீபாவளி மலர் – 2022 (சிறப்பு சலுகை – கூரியர் செலவு)

Format: Print

Publisher: தமிழ் திசை

இந்து தமிழ் தீபாவளி மலர் 2022 இந்து தமிழ் தீபாவளி மலர் 2022இன் சிறப்பம்சமாக பிரபல எழுத்தாளர் பாரததேவியின் தீபாவளி குறித்த கதை, பனை பொருட்களால் உருவான சிறப்பு தீபாவளி உணவு வகைகளின் செய்முறை, காசியின் சிறப்புமிக்க தேவ் தீபாவளி குறித்து பிரபல ஒளிப்படக் கலைஞர் மணிவண்ணனின் ஒளிஓவியக் கவிதை ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. வரலாறுக் கதைகள் நிஜத்தைவிட எப்போதுமே சுவாரசியமானவை. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் சோழர்கள், வரலாறு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சோழர்கள், காவிரி, தஞ்சை குறித்த பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோயிலின் கலைச் சிறப்புகள், தனித்தன்மைகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அர. அகிலா, கோமகன் ஆகியோர் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். பெரிய கோயிலின் ஓவியச் சிறப்புகள் குறித்து பிரபல வரலாற்று ஆய்வாளர் இரா. கலைக்கோவன் எழுதியிருக்கிறார். தஞ்சையின் வரலாற்றைப் பின்தொடர்ந்து பல்வேறு அரசர்களைப் பற்றி ஆராய்கிறது எஸ். ராஜகுமாரனின் கட்டுரை. கல்கி பிறந்த புத்தமங்கலத்துக்கே சென்று, அவர் வாழ்ந்த வீட்டை படம்பிடித்துள்ளார் எஸ். சந்திரமௌலி. ஆன்மிகப் பகுதியில் எஸ். சுந்தரராமன் தமிழ்நாட்டின் பிரபல ஆறு அம்மன்களைக் குறித்து விரிவான, வழிகாட்டும் குறிப்புகளோடு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கிறிஸ்தவ சமயத்தில் மாலையம்மன் என்கிற பெண் தெய்வத்தைக் குறித்து நிவேதிதா லூயிஸும், இஸ்லாம் குறித்து ரமீஸ் பிலாலியும் எழுதியிருக்கிறார்கள். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டதைப் பேசுகிறது சினிமாப் பகுதி கட்டுரை. தமிழ் சினிமாவில் கடந்த நூற்றாண்டில் இல்லாத வகையில், கடந்த 20 ஆண்டுகளில் பல நாயகிகள் நீண்ட காலத்துக்கு நாயகிகளாகவே நடித்துவரும் போக்கு அதிகரித்திருக்கிறது. அந்த நாயகிகளின் தனித்தன்மையை ஆராய்கிறது ஒரு கட்டுரை. 80-களின் எல்லா பிரபலப் பாடல்களுமே இளையாராஜா இசையமைத்தவை என்று தவறாக நம்பப்பட்டுவரும் நிலையில், பல மறக்க முடியாத பாடல்களை இசையமைத்த சந்திரபோஸ் குறித்து கானா பிரபா எழுதியுள்ளார். இந்த தீபாவளி மலரில் நகைச்சுவை பகுதியும் களைகட்டியிருக்கிறது. தமிழின் பிரபல இயக்குநர்களின் டெம்பிளேட் தன்மைகள் குறித்து ஒரு பகுதியும், சமீபத்தில் வெளியான பிரபலத் திரைப்படங்களில் ‘வைகைப் புயல்’ வடிவேலு நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனையாக மற்றொரு பகுதியும் சிரிக்க வைக்கின்றன. மலைகளின் ராணி ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஊட்டி உருவான விதம் – அதற்கு அடித்தளமிட்ட ஜான் சல்லிவன் குறித்து ஒரு கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். ஆலப்புழையில் கயாகிங் எனும் படகு பயணம், அருவிகள் நிறைந்த நெல்லியம்பதி எனக் கேரளத்தின் இரண்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றன பயணம் பகுதிக் கட்டுரைகள். பிரபல சமையல் கலை நிபுணர் ராகேஷ் ரகுநாதனின் விரிவான பேட்டி, சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலங்களின் ஓவியங்கள் அடங்கிய ஒளிப்படக் கட்டுரை, ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது பெற்ற ஒளிப்படக் கலைஞர் மதுரை செந்தில்குமரனின் ஒளிப்படப் பயணம், திருக்குறுங்குடி கோயில் சிற்பங்கள் பற்றி பிரபல ஓவியர் சந்ருவின் விவரிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் பிரபல எழுத்தாளர்கள் ஜிஎஸ்எஸ், மாத்தளை சோமு, கமலாலயன், மோ. கணேசன், ஏக்நாத் ஆகியோரின் சிறப்புப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

Related Books

கிப்ளிங்கின் காடு

‘எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை புலி. புதிது புதிதாகக் கற்கவும் தேவைக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளை வகுத்துக்கொள்ளவும் அது தயங்குவதில்லை. என் தேசத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிரிட்டனிடம் கப்பல் இருக்கிறதா? நானும் கட்டுவேன் நூறு கப்பல்கள்' என்று திப்பு சுல்தான் கர்ஜிக்கும்போது உடல் சிலிர்த்துவிடுகிறது! ‘ஆங்கிலேய ஆசிரியர்களிடம் தமிழ் கற்கும் மாணவனாக இருக்கும் நான், தமிழரிடமிருந்து நேரடியாகக் கற்கும் மாணவனாக உயர வேண்டும். நான் விரும்பும் தமிழ் என் தமிழாக மாற வேண்டும். இது என் மொழி என்று ஒரு தமிழனைப் போல் பெருமிதத்தோடு நான் முழங்க வேண்டும்' என்று ஜி.யு. போப் சொல்லும்போது, ‘தமிழ்' குறித்து எழும் பெருமிதம் அலாதியானது. ‘அழிவின் கடவுளுக்கும் அறிவின் கடவுளுக்கும் இடையில் ஒரு போர் நடந்து முடிந்திருக்கிறது. நான் தோற்றுவிட்டேன். இனி நான் அழிவின் கடவுள் இல்லை, அறிவுதான் என் கடவுள். இனி ஏதெனா என்று யார் அழைத்தாலும் நூலுடன்தான் செல்வேன். வாளைவிடவும் கூர்மையான இந்த ஆயுதத்தை எல்லா மனிதர்களுக்கும் வழங்கும்வரை நான் தேவலோகம் வரமாட்டேன்!’ என்று போர்க்கடவுளான ஏதெனா, அறிவுக்கடவுளாக மாறும்போது நம் மனத்தில் இடம்பிடித்துவிடுகிறார்.

நான் ஒரு கனவு காண்கிறேன்!

கட்டளையிடும் மன்னர்களுக்கு மத்தியில், ‘சக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். போர் தீங்கானது. எல்லா உயிரும் ஒன்றுதான். நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். பவுத்தம் என்னைத் திருத்தியிருக்கிறது. நீங்களும் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அசோகரைப் பற்றி ‘வரலாறு என்ன நினைக்கும்?’ ‘என் கனவில் வெள்ளை அமெரிக்கா கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு தன் நூற்றாண்டு காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும். கறுப்பு அமெரிக்கா வெள்ளை அமெரிக்காவை அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் தேவாலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருப்பார்’ எனும் மார்டின் லூதர் கிங்கின் ‘கனவு' மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘அன்பெனும் மொழியைப் புரிந்துகொள்ள காதுகள் தேவையில்லை. விடுதலை எத்தனை அழகானது என்பதை உணரக் கண்கள் தேவையில்லை. மனிதநேயத்தை உணர்த்தும் வலிமை சொற்களுக்கு இல்லை. என் இசைக்கு மொழியில்லை. எல்லைகள் இல்லை. பாகுபாடுகள் இல்லை’ என்று பீத்தோவன் சொல்லும்போது அதுவே இசையாக மாறிவிடுகிறது!

பாபாசாகேப் அம்பேத்கர்

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நவீன இந்திய வரலாற்றை புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பங்களிப்புகள் அனைத்து தளங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அவர் கட்டியெழுப்பிய அரசியலமைப்பு சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, “நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம்'' என சில ஆண்டுகளுக்கு முன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். காங்கிரஸ், இடதுசாரி உட்பட பிற கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரை முன்வைத்து பேசுவதை அவ்வப்போது காண முடிகிறது. மத்திய மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பெயரில் நிறைய நலத் திட்டங்களையும், விழாக்களையும் அதிகளவில் முன்னெடுக்கின்றன.

0
Help & Support