Format: Print
Publisher: தமிழ் திசை
பொங்கல் மலர் 2023 பொங்கல் என்பது மதங்களைக் கடந்த தமிழ்க் கொண்டாட்டம். இந்த முறை இந்து தமிழ் திசை பொங்கல் மலரில் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் கட்டுரைகள் அணிவகுத்துள்ளன. உலகுக்கு வளம் தரும் சூரியன் குறித்த கேள்வி-பதில் பகுதியை எழுதியிருக்கிறார் பிரபல குவிஸ் மாஸ்டர் ஜிஎஸ்எஸ். அத்துடன் தென் மாவட்டங்களில் பொங்கலுக்குப் பொங்கல் சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாரம்பரிய மருந்து குறித்து பேராசிரியர் ஓ.முத்தையா எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. சென்னையில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடைபெற்றுவந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து மற்றொரு கட்டுரை பேசுகிறது. ஆன்மிகம் பகுதியில், திருப்புகழின் பின்னணியில் முருகனைக் குறித்து எழுத்தாளர் ஜிஏ பிரபா எழுதியுள்ள கட்டுரை, வெள்ளித்திரையில் சூரியபகவனைக் குறித்து ஜிஎஸ்எஸ் எழுதியுள்ள கட்டுரை ஆகியவற்றுடன் பன்னிரு ஆழ்வார்கள் குறித்து கே. சுந்தரராமன் எழுதிய விரிவான பகுதி ஆன்மிகப் பகுதிக்கு சிறப்பு சேர்க்கிறது. சினிமா பகுதியில் நடிகர் கமல் ஹாசன் குறித்த சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கமல் ஹாசனின் திரைப்பட நகைச்சுவை, திரைப்படங்களில் அரசியல் குறித்து இரண்டு கட்டுரைகள் அலசுகின்றன. கமல் ஹாசனின் நடிப்பு, நட்பு குறித்து நடிகர் நாசரின் விரிவான பேட்டி, கமல்ஹாசனின் நெடுநாள் மேக்கப் கலைஞரின் பேட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 80களில் இளையராஜா கோலோச்சிய காலத்தில் மறக்க முடியாத பாடல்களைத் தந்த சந்திரபோஸ் குறித்து கானா பிரபா எழுதியுள்ள கட்டுரை அலசுகிறது. வசனத்துக்காக அறியப்பட்ட கருணாநிதி எழுதிய திரைப்படப் பாடல்கள் குறித்து பி.ஜி.எஸ். மணியனின் கட்டுரை பேசுகிறது. பயணம் பகுதியில் கவிஞர் சக்தி ஜோதி, எழுத்தாளர் சாலை செல்வம், சுஜாதா ஆகியோரின் விரிவான பயண அனுபவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. காபிக்குப் புகழ்பெற்ற சிக்மளூரு, பிஹாரில் உள்ள பெரும் ஏரிகளில் ஒன்றான காவர் ஏரி, அரியலூரின் டைனசோர் தடங்கள், பெண்கள் நெடு நீளமாகக் கூந்தல் வளர்க்கும் சீன கிராமம் ஆகிய பகுதிகளைப் பற்றி தனித்தனிப் பயணக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாழ்வு இனிது பகுதியில், பண்டைத் தமிழ் இசைக் கருவியை மீ்ட்டெடுத்த இளைஞர், மேற்குவங்கத்தின் நிகழ்த்துக் கலையான சோவ் நடனம், மறக்கப்பட்ட கிராமத்து விளையாட்டுகள், நமக்கு புத்துணர்வு ஊட்டும் தேநீர் பிறக்கும் கதை, யானைகளைப் பார்ப்பதை நல்லதாகக் கருதும் பழங்குடிகள் உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சென்னையின் பெருமைமிகு அடையாளங்கள், கொ.மா.கோ. இளங்கோவின் சிறார் கதை, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளின் சுருக்கம், ஓவியர் தியானேஸ்வரனின் பறவை ஓவியங்கள் உள்ளிட்டவையும் வாசிப்புக்கு தனி அனுபவத்தைத் தரும்.