படிக்கிற வயதில் திரைப்படம் பார்த்து சிறுவர்கள் சீரழிந்து விடுகிறார்கள் என்பதே பெரும்பாலும் இளையோர் குறித்த கவலையாக சமூகத்தில் உள்ளது. பொத்தாம் பொதுவாக திரைப்படங்கள் குழந்தைகளை கெடுத்துவிடும் என்று புலம்புவதினால் நெடுங்காலமாக நாம் இரண்டு விதமான சிக்கல்களுக்குள் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறோம். ஒன்று, நல்ல சினிமாவை சிறார்களுக்கு அறிமுகப்படுத்த தவறுகிறோம். இராண்டாவது, நிதர்சனத்தை கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து நம் கண்முன்னே குழந்தைகள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க வழி தெரியாமல் மறுகுகிறோம்.
உண்மையில் நாம் பேச வேண்டியது, எந்த மாதிரியான சினிமா சமூகத்தை உய்விக்கும் என்பதே. அத்தகைய திரைப்படங்களை இளையோருக்கு அறிமுகம் செய்து வைத்தாலே போதும். எத்தகைய சினிமா தனக்கு தேவை, தேவையில்லை இந்த இரண்டையும் அவர்கள் பகுத்தறிந்து தேர்வு செய்து கொள்வார்கள்.
சினிமாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்ன? என்கிற அடுத்த கேள்வி எழக்கூடும். கதை சொல்லுதல், ஓவியம் தீட்டுதல், இசைத்தல், நடனமாடுதல், உயரிய தொழில்நுட்பங்களை அறிதல், நடிப்புத்திறமை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை இளம் வயதினர் கற்றறிதல் அவர்களுடைய ஆளுமை மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என்கிறனர் நிபுணர்கள். இதனை ஓரளவுக்கு பெற்றோரும் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இத்தனை கலைத்திறன்களின் கூட்டுக்கலவைதான் சினிமா. ஆகவேதான் அது நம் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது.