கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்கள் ஏராளம். கரோனா வைரஸ் எப்படியானது, அது பரவும் விதம், பாதிப்புகளின் வீரியம் எப்படியானது எனப் பல கேள்விகள் நிலவின. அரசு சார்பில் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், மிகச் சிக்கலான அந்த மருத்துவப் பிரச்சினையை எளிய தமிழில் சொல்வதற்கு மருத்துவர் கு.கணேசன் போன்ற மருத்துவ நிபுணர் தேவைப்பட்டார். கணேசன் மருத்துவர் மட்டுமல்ல; புனைவெழுத்திலும் அனுபவம் கொண்டவர். மருத்துவம், சுகாதாரம் தொடர்பான உயர் தொழில்நுட்பப் போக்குகளை எளிய உதாரணங்களுடன் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் மொழியில் எழுதும் அரிய சான்றோரில் ஒருவர்.இயல்பான ஒப்புமைகளுடன் இவர் எழுதும் எந்த ஒரு புதிய விஷயமும், ஒரே வாசிப்பில் உங்கள் சிந்தையில் இடம்பிடித்துவிடும். இந்து தமிழ் திசையின் கருத்துப் பேழை, இணைப்பிதழ்கள், செய்திப் பக்கங்கள் என இவரது கட்டுரைகளும் கருத்துப் பதிவுகளும் இடம்பெறாத பகுதிகளே இல்லை எனலாம். அந்த வகையில், ‘காமதேனு’ வார / மின்னிதழில் இவர் எழுதிய ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ தொடர் தமிழ் வாசிப்புலகில் மிக மிக முக்கியமானது. வெளியானபோதே ஒவ்வொரு வாரமும் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது.
நோய்க்கிருமிகளின் வடிவம் குறித்த எளிய உதாரணங்கள், மனித உடலில் நுழையும் கிருமிகளை எதிர்கொள்ள உடலில் இயல்பாகவே அமைந்திருக்கும் ‘ராணுவ’ அமைப்பின் செயல்பாடுகள், மருந்துகள் - தடுப்பூசிகள் உள்ளிட்டவை நோய்க்கு எதிராகச் செயல்படும் விதம், நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள், எதிரணுக்கள், நுண்ணுயிரிகள், தடுப்பாற்றல் மண்டலம், பெரியம்மை, சின்னம்மை, போலியோ, எய்ட்ஸ், எபோலா உள்ளிட்ட நோய்களின் தன்மை, மனிதர்களின் ஆயுள்கால அதிகரிப்பிலும் உடல்நலப் பாதுகாப்பிலும் தடுப்பூசியின் பங்களிப்பு என மருத்துவ மொழியால் அத்தனை எளிதில் விளக்க முடியாத பல நுணுக்கங்களை நம் சரளமான வாசிப்புக்கு விருந்தாக இவர் படைக்கும் விதம் தனித்தன்மையானது.