ஆங்கிலத்தில் அசத்தலாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்கிற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலத்தைச் சுவாரசியமாகக் கற்றுத்தரும் ஆசான்கள் வாய்ப்பதில்லையே! இந்தக் குறையைப் போக்க, கேலிச் சித்திரங்கள், அவற்றில் இடம்பெறும் கிண்டலான உரையாடல்கள், குட்டிப் பெட்டிச் செய்திகளின் வடிவில் வார்த்தைகள் உருவான கதை, அறிந்த ஆங்கிலச் சொற்றொடரின் அறியாத பயன்பாடு… இப்படி ஆங்கில மொழியின் மிகவும் நுட்பமான அம்சங்களைக்கூட எளிமையாக விவரிக்கும் தொடர்தான் ‘ஆங்கிலம் அறிவோமே’. ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் இது.
புதிதாக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல், ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபிப்பவர் ஜி.எஸ்.எஸ்.