இனிக்கும் கதைகளில் துளிர்க்கும் குறள் திருக்குறள், உலகின் பொதுமறையாக அகிலம் முழுவதும் சென்று சேர்வதற்கான காரணம்; நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுவான வாழ்க்கை முறையின் நுட்பங்களை குடிகளுக்கும், குடிகளை ஆளும் மன்னனுக்கும் சொல்லிச் சென்றிருப்பதுதான்.
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர் தொடங்கி இன்றைய சாலமன் பாப்பையா வரை அதற்குத் தமிழறிஞர் பலரும் உரை எழுதி, அது படித்தவர் பாமரர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று நினைத்தனர். என்றபோதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கப்பட்டத் திருக்குறளை, கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்க நாம் தவறியதால், கடந்த ஒரு தலைமுறை தமிழர்களிடம் திருக்குறள் பெரும் ஒவ்வாமையாக மாறி நிற்பது துயரிலும் பெரும் துயர்.
ஆனால், சிறார்களின் மனதில் திருக்குறள் இனிக்கும் கரும்பாக இடம்பெற்று, அது அவர்களது வாழ்க்கை முழுமைக்கும் நலம் பயக்க வேண்டும் என்றால், அதைச் சிறார் இலக்கிய வடிவில், சிறார்களுக்கான கதையாகச் சொல்ல வேண்டும் என்கிற உத்தியில், ‘குட்டிகள் குறள்’ என்கிற இந்த நூலின் வழியாக அதன் ஆசிரியர் மமதி சாரி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.