இன்று அனைவராலும் மிக எளிதாக வாங்கிவிட முடிகிற உப்பு, ஒரு காலத்தில் தங்கத்தைவிட விலைமதிப்புள்ளதாக இருந்தது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய ஐஸ்கட்டிகள், இன்று வீடுகள்தோறும் கிடைக்கின்றன. இப்படித்தான் உணவிலும் அது சார்ந்த பொருள்களிலும் மாற்றங்களும் புதுமைகளும் வந்தபடி உள்ளன.நிலத்துக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப உணவுப் பழக்கம் அமைகிறது. அவரவர் பகுதியில் விளைகிற காய்கறிகளைக் கொண்டே மக்கள் சமைத்தனர். போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட பிறகு ஓரிடத்திலிரிந்து மற்றோர் இடத்துக்குப் பண்ட மாற்றம் நடைபெற்றது. இது மக்களின் உணவுப் பழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் விளைகிறவற்றைக்கூடத் தற்போது மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எவ்வளவு உணவு வகைகள் வந்தபோதும் வழிவழியாக வழங்கிவரும் பாரம்பரிய உணவு வகைகளே மக்களின் நிரந்தரத் தேர்வாக இருக்கின்றன. தங்கள் பகுதியின் அடையாளங்களாக நிலைத்துவிட்ட உணவின் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு எப்போதும் குறைந்ததில்லை. இந்த உண்மையைத்தான் இந்நூல் விளக்குகிறது.