பொறியாளர் மு.இராமனாதன் சிக்கலான பிரச்சினைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் வல்லவர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உட்பட பல்வேறு இதழ்களில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அனைத்தும் இந்த வகைப்பட்டது. இவ்வாறு அவர் பல்வேறு இதழ்களில் எழுதிய 19 கட்டுரைகளின் தொகுப்பாக ‘தண்டிக்கப்படுகிறதா தமிழகம்?’ என்ற இந்த நூல் உருவாகியிருக்கிறது.
தமிழகம் என்ற உப தலைப்பின் கீழ் 6 கட்டுரைகளையும், சமூகம் தொடர்பாக 6 கட்டுரைகளையும், பொறியியல் சார்ந்த 9 கட்டுரைகளையும் அவர் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசின் தலைமையை ஏற்றுக்கொண்டு மாநிலங்கள் செயல்படுகின்றன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநிலச் சுயாட்சி முறைக்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டுக்கு எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன என்பதை பொறியாளர் மு.இராமனாதன் இந்த நூலில் விவரித்துள்ளார்.
இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றிருக்கும் தென்னிந்திய மாநிலங்கள் பல்வேறு தளங்களில் புறக்கணிக்கப்படுவது பற்றிய கட்டுரையுடன் நூல் தொடங்குகிறது. ‘மொழிக் கொள்கையை எப்படிக் கையாள்வது?’ கட்டுரையில், ‘தமிழோடும் ஆங்கிலத்தோடும் கூடுதலாக இன்னொரு இந்திய மொழியைக் கற்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. அதற்கான அவசியமிருந்தால், அந்த மூன்றாவது மொழி தமிழையும் ஆங்கிலத்தையும் விஞ்சக்கூடியதாக இருந்தால், அதன் மூலம் வாழ்வியல் தேவைகள் நிறைவேறுமானால், தமிழர்கள் யார் சொல்வதற்காகவும் காத்திருக்க மாட்டார்கள், தாமாகவே அந்த மூன்றாவது மொழியைக் கற்பார்கள்’ என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இதன் மூலம் ‘விரும்பாத ஒரு மொழியை யார் மீதும் திணிக்க முடியாது, அதே வேளையில் தமக்கு அவசியமான மொழியொன்றை ஒருவர் கற்பதை யாராலும் தடுக்கவும் முடியாது’ என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.