கடந்த 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் விவாதப் பொருளாக நீடித்து வருகிறது ‘பொது சிவில் சட்டம்’. மக்களவைத் தேர்தல் 2024-ஐ சந்திக்கும் வேளையில், இந்த விவாதம் இன்னும் தீவிரம் கண்டுள்ளது.
இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், ‘எண்ணற்ற வேற்றுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், முரண்பாடுகள் பலவற்றையும் கடந்து, ஒற்றுமையாக வாழ்வதற்கு இணக்கம்தான் அவசியமேயன்றி, தனிப்பட்ட உரிமைகளை பொதுவாக்குதல் அல்ல’ என்று முன்வைக்கப்படும் வாதங்களையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.
‘சிறுபான்மைச் சமூக மக்களின் மீது பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது, அவர்களின் தனிநபர் உரிமைகளையும் பாதுகாப்புகளையும் நீர்த்துப்போகச் செய்வதுடன், அவர்களின் பண்பாட்டுச் சுயாட்சியை அழித்து, மதச் சுதந்திரத்தையும் சீர்குலைக்கும்’ என்பது எதிர்ப்பு வாதம். அதேவேளையில், ‘பாலினச் சமத்துவத்தையும் பெண்களின் உரிமைகளையும் உறுதி செய்தல், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம் போன்றவற்றில் சம உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்றவை சாத்தியம்’ என்ற பொது சிவில் சட்ட ஆதரவுக் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.
இந்தப் பின்புலத்தில்தான் குடிமக்களாகிய நமக்கு எழுகின்ற ஓர் அடிப்படை சந்தேகம்: ‘பொது சிவில் சட்டம் நல்லதா, கெட்டதா?’
இந்தக் கேள்விக்கு மிக எளிதாகவும், மிகத் தெளிவாகவும் பதில் தரும் புத்தகம்தான் உங்கள் கைகளில் தவழும் ‘பொது சிவில் சட்டம்... இந்தியாவுக்கு வேண்டுமா, வேண்டாமா? 360* பார்வை’.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு கோணங்களில் ‘பொது சிவில் சட்டம்’ குறித்த சாதக, பாதகங்களை எளிதில் நாம் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூலில் முன்வைத்துள்ளனர்.
இந்த அத்தியாயங்கள் ‘இந்து தமிழ் திசை’ செய்தி வலைதளத்தில் பதிவானபோது, நெட்டிசன்களின் ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் தொடர் மிக நேரத்தியாக புத்தக வடிவம் பெற்றுள்ளதையும் உணர முடிகிறது.
எவ்வித முன்முடிவுகளுக்கும் இடம் தராமல், தான் சந்தித்த வல்லுநர்களிடம் மிக நிதானமாக நேர்காணல் செய்தும், கட்டுரைகளைப் பெற்றும் கச்சிதமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் செதுக்கியிருக்கிறார், மூத்த பத்திரிகையாளரும், நூலாசிரியருமான பால.மோகன்தாஸ்.
பொது சிவில் சட்டத்துக்கான ஆதரவும், அதற்கான காரணங்களும் ஓர் அத்தியாயத்தில் இடம்பெற்றால், அதற்கு ஈடாக எதிர்ப்பும், எதிர்ப்புக்கான காரணங்களையும் உள்ளடக்கி அடுத்த அத்தியாயம் இடம்பெறச் செய்தது நூலாசிரியரின் ‘தகவல் - உண்மை’ சார்ந்த இதழியல் அனுபவத்தைக் காட்டுகிறது.