கலை, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த விழுமியங்களைக் கொண்டிருக்கும் வளமான ஓர் ஊர் விழுப்புரம். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், 30ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி ‘இந்து தமிழ் திசை’யின் இணையப் பதிப்பில் எஸ். நீலவண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
விழுப்புரம் மாவட்டம் உருவான வரலாறு, மாவட்டத்தின் தொழில் துறை, விவசாயிகளின் நிலை, போக்குவரத்து வசதிகள், வழிபாட்டுத் தலங்களில் எத்தகைய வசதிகள் தேவைப்படுகின்றன, மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினை போன்ற பலவும் இந்த நூலில் அலசப்பட்டிருக்கின்றன.
மயிலம், மரக்காணத்தில் கிரானைட் தொழில், வானூரில் கோதுமையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள் தொழிற்சாலைகள், மரக்காணத்தில் மீன், காய், கனி ஏற்றுமதித் தொழில், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பிற்கு தோதான பரந்துவிரிந்திருக்கும் மேய்ச்சல் நிலம்... போன்ற மாவட்டத்தின் பல வளங்களையும் கட்டுரைகளில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விரிவான கட்டுரைகள் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தை, தொல்லியல், வரலாற்று ஆய்வுகளை முன்னிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு உகந்த மாவட்டமாக ஆக்குவதற்கான உத்தியையும் நூலாசிரியர் இந்நூலில் தந்திருக்கிறார்.