சாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறிவதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட உலக உயிர்கள் அனைத்தையும் ஆட்கொள்ளும் பொருட்டு, அளவில்லா அன்பால், அகிலத்தை படைத்த இறைவன், அர்ச்சாவதார ரூபத்தில் பல அவதாரங்கள் எடுத்து, பல அற்புதங்களை நிகழச் செய்துள்ளார். பின்னர் பலரும் போற்றிப் பணிந்து வழிபடும் வண்ணம் வேண்டுவன வழங்கும் வல்லமை பெற்று கருணாமூர்த்தியாக, இறைவன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களே திருக்கோயில்கள்.
கோயில் என்பது தலைவனின் வீடு. இறைவனின் இருப்பிடம் என்பதாகும். பதியாகிய இறைவனை வழிபட்டு, பசுவாகிய உயிர் தூய்மை அடைந்து, முக்தியைப் பெறுவதற்கு, மூலாதாரமாக பூவுலகில் மாயையைப் போக்கும் இடம் - கோயில். இதுவே ஆணவம் அடங்குவதற்கான இடமாகவும் உள்ளது. துயர்களைத் துடைத்து, துன்பங்களை தீர்த்து பக்தர்களை பரிவுடன், தீமையில் இருந்து தடுத்து, ஆட்கொள்ளும் தலைமை வாய்ந்த தூயவன் உறையும் இடமாக கோயில் திகழ்கிறது.
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்றே’ என்றும், ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் வழங்கப்படும் மொழிகள், கோயில்களுக்குச் சென்று சேவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. மனத்தூய்மை வளர்த்து, நிம்மதியை நல்கி, மனிதனை தூயவனாக்கி, தூயவனை அடைய இக்கோயில்கள் துணை புரிகின்றன.