அட்சய பாத்திரமான அணைகள்! பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை `ஆசியாவின் பொறியியல் அதிசயம்' என்று போற்றுகின்றனர். தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள், பிரம்மாண்ட இயந்திரங்கள் என எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில், பொறியியல் திறமை மற்றும் மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். மொத்தம் 11 அணைகள், மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட எட்டு சுரங்கப் பாதைகள், நான்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள், 10 கால்வாய்கள், ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் சமமட்டக் கால்வாய்கள் என இத்திட்டத்தின் பிரம்மாண்டம் இப்போதும் வியப்பை அளிக்கக் கூடியது. பெரும் பாசனத் திட்டத்தின் வரலாற்றைச் சுமந்திருக்கும் இந்தப் புத்தகத்தை வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, ஆசியாவின் பொறியியல் அதிசயம் உருவானதன் பின்னணியை விளக்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.