அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது.
எப்போது ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கற்றுக்கொள்கிறோமோ அப்போதுதான் அறிவியல் தென்படும். அறிவியலை பொறுத்தவரை அதை முழுமையாகப் புரிந்து படிக்கும்போதுதான் அது நம் வாழ்க்கையில் எப்படி ஒருங்கிணைந்து கிடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அறிவியலை எளிதாகத் தெரிந்துகொள்ள பரிசோதனைகள்தான் இன்றுவரை உதவிவருகின்றன. ஆனால், அந்தப் பரிசோதனையை எந்தக் கஷ்டமும் இன்றி தெரிந்துகொள்ள வழியே இல்லையா என்று நொந்துக்கொள்வோரும் உண்டு.
ஆனால், தன்னுடைய ஆழ்ந்த அறிவியல் புலமையால் அதை முறியடித்துக் காட்டியவர் பேராசிரியர் அ. சுப்பையா பாண்டியன். விஞ்ஞானத்தை விளையாட்டாக எடுத்துச் சொல்வதில் கைதேர்ந்தவர். மிகவும் கடினமான அறிவியலையும் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார். அறிவியலை விளையாட்டாக சொல்வது மட்டுமல்லாமல், அது நம் வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன்படுகிறது என்பதையும் அழகாக எடுத்துச்சொல்வதில் புலமையுடையவர்.
அப்படி அவர் உருவாக்கிய நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுகளை குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல விரும்பினோம். ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பாக வரும் ‘மாயாபஜார்’ பகுதியில் ‘அடடே அறிவியல்’ என்ற பெயரில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு சுப்பையா பாண்டியன் தொடராக எழுதினார். அந்தத் தொடரின் மூலம் அறிவியலின் ஒவ்வொரு விதியையும் பரிசோதனையையும் விளையாட்டாக எடுத்து சொல்லி அதன் மகத்துவத்தைக் குழந்தைகளிடம் கொண்டுசேர்த்தார். பள்ளிகள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் அந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.