2017-ம் ஆண்டு, உலகையே உலுக்கின ‘புளூ வேல்’ மரணங்கள். ‘புளூ வேல்’ எனும் சமூக வலைதள விளையாட்டால், அந்த மரணங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் தற்கொலை மரணங்கள். தமிழகத்திலும் சில தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்தன. இதில் பெரும்பாலும் பதின் வயதினரும் இளைஞர்களும்தான் பாதிக்கப்பட்டனர்.
‘ஏன்? எதற்கு இந்தத் தற்கொலைகள்?’ என்று ஆராய்ந்தபோது, இணையம் குறித்து பதின் வயதினர், இளைஞர்கள் ஆகியோருக்குப் போதுமான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் போனதே காரணம் என்பது தெரிய வந்தது. சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கும் அவர்களுக்கு உடல் நலம் மட்டுமல்ல, மனநலமும் சீர்கெடுகிறது என்பதையும் அந்த மரணங்கள் நமக்குக் கூறின!
இதைத் தொடர்ந்துதான், ‘இந்து தமிழ்’ நாளிதழின், ‘நலம் வாழ’ இணைப்பிதழில், ‘டிஜிட்டல் போதை’ எனும் தலைப்பில், ‘பாதுகாப்பாக இணையத்தைப் பழகுவது எப்படி?’ என்பது குறித்துத் தொடர் எழுத ஆரம்பித்தார் வினோத் ஆறுமுகம். கணினி மென்பொருள் துறையைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே, ‘பாதுகாப்பான இணையம்’ குறித்துப் பல்வேறு ஆய்வுகளையும் களச் செயல்பாடுகளையும் மேற்கொண்டவர். அந்த அனுபவங்கள் நிறைந்த கட்டுரைகள் வாரா வாரம் வெளியாகி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.