
கடலம்மா பேசுறங் கண்ணு!
காடுகளில் வாழும் பழங்குடிகளைப் போல், கடலைச் சார்ந்து வாழ்பவர்களும் கடல் பழங்குடிகள்தான். அவர்களுடைய தொழிலும் பண்பாடும் பல விதங்களில் இன்றைக்கு மாறியிருந்தாலும்கூட, வேட்டை – உணவு சேகரிப்பு என்ற பண்டைய அடிப்படை அப்படியேதான் இருக்கிறது. தொழில் புரியும் விதம் மட்டும் நவீனமடைந்திருக்கிறது.
தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம். மற்றொருபுறம் சமவெளி மக்களும் நமது கடல்களையும் மீனவ மக்களையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருப்பதே நிதர்சன நிலை.
சமவெளியில் வேளாண்மை பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதைப் போலவே, மீனவர்களின் வாழ்வாதாரமான கடல் வளமும் ஆபத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத வளமாகக் கருதப்பட்ட கடல்கள், இன்றைக்குப் பெரும் தடுமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதன் காரணமாகவும் அரசியல்ரீதியிலும் மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
