‘எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை புலி. புதிது புதிதாகக் கற்கவும் தேவைக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளை வகுத்துக்கொள்ளவும் அது தயங்குவதில்லை. என் தேசத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிரிட்டனிடம் கப்பல் இருக்கிறதா? நானும் கட்டுவேன் நூறு கப்பல்கள்' என்று திப்பு சுல்தான் கர்ஜிக்கும்போது உடல் சிலிர்த்துவிடுகிறது! ‘ஆங்கிலேய ஆசிரியர்களிடம் தமிழ் கற்கும் மாணவனாக இருக்கும் நான், தமிழரிடமிருந்து நேரடியாகக் கற்கும் மாணவனாக உயர வேண்டும். நான் விரும்பும் தமிழ் என் தமிழாக மாற வேண்டும். இது என் மொழி என்று ஒரு தமிழனைப் போல் பெருமிதத்தோடு நான் முழங்க வேண்டும்' என்று ஜி.யு. போப் சொல்லும்போது, ‘தமிழ்' குறித்து எழும் பெருமிதம் அலாதியானது. ‘அழிவின் கடவுளுக்கும் அறிவின் கடவுளுக்கும் இடையில் ஒரு போர் நடந்து முடிந்திருக்கிறது. நான் தோற்றுவிட்டேன். இனி நான் அழிவின் கடவுள் இல்லை, அறிவுதான் என் கடவுள். இனி ஏதெனா என்று யார் அழைத்தாலும் நூலுடன்தான் செல்வேன். வாளைவிடவும் கூர்மையான இந்த ஆயுதத்தை எல்லா மனிதர்களுக்கும் வழங்கும்வரை நான் தேவலோகம் வரமாட்டேன்!’ என்று போர்க்கடவுளான ஏதெனா, அறிவுக்கடவுளாக மாறும்போது நம் மனத்தில் இடம்பிடித்துவிடுகிறார்.