வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் புரட்சி நடத்திய பெருமை வேலூருக்கு உண்டு. இப்போது அதே வேலூரில் கல்விப் புரட்சியை விஐடி ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விஐடியில் படிக்கின்றனர். ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆலமரமாய் விஐடி கிளை பரப்பி நிற்கிறது.
இந்த ஆல விருட்சத்துக்கு விதை போட்ட பெருமை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உண்டு. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம். அவரது ஆட்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு மக்களை நேசித்த, மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர் என்பதில் சந்தேகம் இல்லை.
எம்.ஜி.ஆரோடு அரசியலில் நெருக்கமாக பயணித்தவர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன். எம்.ஜி.ஆருடனான அவருடைய பசுமையான அனுபவங்களின் தொகுப்பே உங்கள் கைகளில் தவழும் ‘மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்!’ என்ற இந்த நூல்.