இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. அந்தந்த மொழியின் வரலாறு, அது பேசப்படும் மக்களின் பண்பாட்டுச் சூழல், பிராந்திய மொழி சினிமாவின் பாதைக்கு அது அடித்தளமிட்ட பின்னணி என அடுக்கடுக்கான விஷயங்களை ஆற்றொழுக்காகப் பதிவுசெய்திருக்கிறார் சோழ நாகராஜன். இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’ வெளியானபோது ரசிகர்கள் அதை எப்படி உள்வாங்கிக்கொண்டனர், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் திரையரங்கில் காட்சியுடன் ஒலித்தபோது அதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பன உள்ளிட்ட தகவல்களை சுவாரசியம் குன்றாமல் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். திரைக்கலைஞர்கள் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள், கலை வெளிப்பாட்டின் மூலம் சமூக அங்கீகாரத்தை அவர்கள் வென்றெடுத்த தருணங்கள் என உத்வேகமூட்டும் வரலாறுகளும் திரைப்பட வரலாற்று நதியினூடே பளபளக்கும் கூழாங்கற்களாய் பதிவாகியிருக்கின்றன.