முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.