கட்டளையிடும் மன்னர்களுக்கு மத்தியில், ‘சக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். போர் தீங்கானது. எல்லா உயிரும் ஒன்றுதான். நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். பவுத்தம் என்னைத் திருத்தியிருக்கிறது. நீங்களும் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அசோகரைப் பற்றி ‘வரலாறு என்ன நினைக்கும்?’ ‘என் கனவில் வெள்ளை அமெரிக்கா கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு தன் நூற்றாண்டு காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும். கறுப்பு அமெரிக்கா வெள்ளை அமெரிக்காவை அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் தேவாலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருப்பார்’ எனும் மார்டின் லூதர் கிங்கின் ‘கனவு' மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘அன்பெனும் மொழியைப் புரிந்துகொள்ள காதுகள் தேவையில்லை. விடுதலை எத்தனை அழகானது என்பதை உணரக் கண்கள் தேவையில்லை. மனிதநேயத்தை உணர்த்தும் வலிமை சொற்களுக்கு இல்லை. என் இசைக்கு மொழியில்லை. எல்லைகள் இல்லை. பாகுபாடுகள் இல்லை’ என்று பீத்தோவன் சொல்லும்போது அதுவே இசையாக மாறிவிடுகிறது!