இந்தச் சூழலில், சமூக அக்கறையுடன், அறிவியலின் ஆபத்துகளையும், பழமையென நாம் புறந்தள்ளிய ஆரோக்கிய பழக்கவழக்கங்களையும் நமக்கு உணர்த்தும் விதமாக இந்தப் புத்தகத்தை சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் எழுதியிருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைத் தூக்கியெறிவதற்கான காரணமாக மாறிவிடக்கூடாது என்பதை இந்நூலின் மூலம் ஆசிரியர் உணர்த்தியிருக்கிறார். கிராம வாழ்க்கையின் மேன்மைகள், பயணங்களால் விளையும் நன்மைகள், நிலாச் சோறு அனுபவங்கள், அடிமைப்படுத்தும் செல்போன், இயற்கை உணவு வகைகள், மருந்துகளுக்குள் மறைந்திருக்கும் அரசியல், நவீன ஆடைகளின் ஆபத்துகள், குழந்தைகளையும் விட்டுவைக்காத மனஅழுத்தம், எண்ணெய்க் குளியல், நடைப்பயிற்சியின் அவசியம், தூக்கத்தின் முக்கியத்துவம், அதீத தூக்கத்தின் கேடுகள், காற்று மாசு என இந்நூலின் வழியே இன்றைய காலத்தில் நாம் அவசியம் அறிய வேண்டிய உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பற்றி துறைவாரியாக விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.