ஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புராணம், வரலாறு, செவிவழிச் செய்திகள், கர்ண பரம்பரைக் கதைகள், அந்தப் பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை, கலை, பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அனைத்தையும் கட்டுரையின் உள்ளடக்கத்தில் கொண்டுவரும் லாகவமான ஜி.எஸ்.எஸ்ஸின் எழுத்துப் பாணியில், ஒரு கட்டுரையில் அனேக கருத்துகளும் மிளிர்கின்றன. சென்னை நகரத்துக்கே காரணப் பெயராக அமைந்த சென்னமல்லீஸ்வரர் - சென்ன கேசவர் ஆலயம், வட சென்னை வியாபாரிகளுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கும் சின்னக்கடை அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்வத் திருவுருக்கள், திருப்பாற்கடல் திரிமூர்த்தி ஆலயம், தாய்லாந்தின் ப்ரா ப்ரோம் ஆலயம் என ஒவ்வொரு ஆலயத்திற்குள்ளும் உறைந்திருக்கும் இரு அதிசயங்கள் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.