நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்படியுமே அணுக வேண்டும் என்ற தீர்க்கரீதியான பார்வையொன்றை இந்த நூலில் இடம்பெற்றுள்ள நீதிநாயகம் கே.சந்துருவின் கட்டுரைகள் வழங்குகின்றன. சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்திற்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுத்தாராயும் இக்கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.