'வாயே மனித உடலின் ஆரோக்கியத்துக்கு முதன்மையான வாசல்' என்பது அனுபவமொழி. அந்த வாய்க்குள் வாய்த்த பற்களின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டியது அனைத்திலும் முதன்மையானது என்பது, இன்று பலருக்கும் சொல்லித்தான் தெரியவேண்டி இருக்கிறது. அப்படியே தெரிந்துதான் இருக்கிறது என்றாலோ, சோம்பலின் வழியே அந்தப் பராமரிப்பை கைவிட்டுவிட்டு கடைசியில் பல்லை இழந்து, அதன் வழியே சொல்லை இழந்து நிற்பது சோகமானதுதான்.
இன்று மிகவும் பரபரப்பான மருத்துவ வகைகளில் பல் மருத்துவம் முக்கியமானதாக இருக்கத்தான் செய்கிறது. இது, முக அழகு மருத்துவத்துக்கு அடிப்படையாகவும் அமைந்துவிடுகிறது. நாலு தெருவுக்கு ஒரு பல் மருத்துவர் கடைவிரித்துதான் இருக்கிறார் நம்பிக்கையோடு. அந்த அளவுக்கு பல் பாதிப்புகள் விரவி இருக்கின்றன.
இந்த நூலில் பல் மருத்துவத்தைப் பற்றி மருத்துவர் தீபக் தாமஸ் சுவையான வரலாறு போலவும், புள்ளிவிவரம் போலவும், இலக்கியச் சாரல் போலவும் இனிமையாக எழுதியிருக்கிறார். அவரின் எழுத்தோவியம், பல்லைப் பற்றிய விவரங்களை சுவைத்துப் படிக்க வைக்கிறது.