பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணிய கருத்தியலைத்தான் இந்நூலில் நாம் அனைவரும் எளிதில் புரியும்விதமாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். நூலாசிரியர் அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணர் என்பதால், பணம் ஈட்டுவதையும், ஈட்டியதைச் சேமிப்பதையும் அவர் உளவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். இந்த அணுகுமுறையே பணம் ஈட்டுவது தொடர்பான பிற நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணம் ஈட்டுவதற்குப் பொருளாதார அறிவு மட்டும் போதாது; வாழ்வியல் பாடங்களும் பணம் குறித்த உளவியல் புரிதலும் அவசியம் தேவை என்பதை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறார். பணத்தைச் சம்பாதிக்கவும், இருப்பதைச் சேமிக்கவும், இருக்கும் கடனை அடைக்கவும், வரவுக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடவும், முதலீடுகள் செய்யவும், பிடித்த வேலையில் ஈடுபடவும், விரும்பும் தொழிலைத் தொடங்கவும், நிறைவுடன் வாழவும் நமக்குத் தேவைப்படும் திடமான வழிமுறைகள் இந்நூலில் மிகுந்துள்ளன; அவை நேர்த்தியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.