ஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல்லத்தில் நடைபெற்ற ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு, நமக்கு பெரிதும் உதவுவது புகைப்படங்களே. பல மறக்க முடியாத காலகட்டங்களான குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் போன்றவற்றை நினைவுகூர வைப்பது புகைப்படங்களே. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக் கூட்டம், தலைவர்கள், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுவது புகைப்படங்களே. நமது முன்னோரின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.