‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதலிய சமயங்கள் தோன்றிய காலத்தே தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர் நமது முன்னோர். அத்தகைய வழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூரில் பிறந்த இவர் தற்போது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்களின் வரலாறு மற்றும் கல்வெட்டுகளின் மீதுள்ள ஈடுபாட்டால், பல ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.