நம் எல்லோரது நினைவிலும் ஆயிரமாயிரம் ஜன்னல்கள் கொண்ட ஞாபக அறைகள் இருக்கும். ஒவ்வொரு ஜன்னலைத் திறந்தால் ஒவ்வொரு கதை இருக்கும். நல்லது கெட்டது, இனிப்பு கசப்பு, நட்பு துரோகம் என்று நினைத்துப்பார்க்கவும் அந்த நினைவுகளில் மூழ்கிக் கடந்த காலத்துக்குச் சென்றுவரவும் அந்தக் கதைகள் கைகொடுக்கும். நம் அனுபவங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி என்றால் பிறரது அனுபவங்கள் உலகத்தைக் காட்டும் கண்ணாடி. மூத்தோரது அனுபவங்களில் பல நமக்குப் புதிய பாதைகளை அறிமுகப்படுத்தும். குழம்பித் தவிக்கிற மனங்களுக்குத் தெளிவைத் தரும். எண்பது வயதைக் கடந்த இதய நோய் நிபுணர் கல்யாணி நித்யானந்தனின் அனுபவங்களும் அதைத்தான் செய்கின்றன. கரோனா ஊரடங்கு நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைய கல்யாணி நித்யானந்தனுக்கோ தன் மனத்தின் அடியாழத்தில் கூழாங்கற்களைப் போலப் பரவிக் கிடக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக் கதைசொல்லும் பேறைத் தந்தன. பரண்மேல் போட்டுவைத்திருந்த பழைய டிரங்க் பெட்டியைத் திறந்து அதற்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கதையைச் சொல்லும் நம் வீட்டுப் பெரியவர்களைப் போல அவ்வளவு அணுக்கமாகச் சம்பவங்களைக் கோத்திருக்கிறார் கல்யாணி. அவரது பால்ய கால நினைவுகள் தொடங்கி, கல்லூரிக் காலம், மருத்துவப் பணி, மறக்க முடியாத மனிதர்கள், வெளிநாட்டுப் பயணம், மருத்துவ ஆலோசனைகள், முதியோர் நலன் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் சுவைபட விவரித்திருக்கிறார்.