எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்பரசன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். உலகின் முதல் இடதுசாரி ஜனநாயக அரசு கலைக்கப்பட்டபோது அதைக் கண்டித்து சி.பி.ராமசாமி குரல் கொடுத்தது இதற்கு ஒரு சோறு பதம். இந்த நூலில் சட்டத் துறை ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாது, அவர்களது வாதாடும் பண்பும் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக இடதுசாரி வழக்கறிஞராக அடையாளம்பெற்ற என்.டி.வானமாமலை நீதிமன்றத்தில் வாதாடும்போது எதிர்த் தரப்பு வழக்கறிஞரையோ வாதி/பிரதிவாதிகளையோ ஒரு சுடு சொல்கூடச் சொல்லமாட்டார் என நூலாசிரியர் கூறுகிறார். புகழ்பெற்ற லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தியாகராஜ பாகவதருக்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் வாதாடிய வி.எல்.எத்திராஜின் வாதாடும் திறனையும் சுவைபட அன்பரசன் விவரித்துள்ளார். வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வழக்கறிஞர்கள் நிறைந்த அறையில்கூட நீதிபதிகளுக்கும் தனக்கும் ஓர் அந்தரங்கமான உரையாடலை சாத்தியப்படுத்தக்கூடிய ஆளுமையாக எத்திராஜ் இருந்துள்ளார்.