
தொழில் முன்னோடிகள்!
`முப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார்? எது? எந்த கணம்? யாராலும் இதைக் கணித்து விட முடியாது. அது ஒரு எழுச்சி. அது உங்களுக்குள்தான் உருவாக வேண்டும்.
அதேசமயம் சொந்தக் காலில் நிற்பதுதான் லட்சியம் என்று முடிவெடுத்த பின்னால் நம் கைபிடித்து அழைத்துச் செல்ல ஒரு நல்ல உள்ளம் வேண்டும். தொழில்முனைவோராக தங்களது ராஜபாட்டையில் சந்தித்த நெருக்கடிகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டு வழிநடத்தும் முன்னோடிகளால்தான் அந்த நெருப்பு உங்களுக்குள் பற்றத் தொடங்குகிறது. அப்படி ஒரு உத்வேக நெருப்பை உங்கள் கைகளில் அளிக்கிறார் எஸ்.எல்.வி.மூர்த்தி.
கடந்த காலங்கள்தான் வரலாறு ஆகின்றது. அந்த வரலாற்றிலும் புதியவற்றை உருவாக்கியவர்களின் அனுபவம்தான் தொழில்முனைவின் கடினப் பாதைக்கு வழி காட்டும் விளக்காகிறது. இந்த தொடர் வெளியான ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திசை தெரியாத பக்கங்களில் இருந்து வாசகர்களிடமிருந்து வந்த கடிதமும், தொலைபேசி அழைப்புகளுமே அதற்கு சான்றாக இருந்தது.
ஒரு தமிழ் நாளிதழாக `தி இந்து’ அறிவைப் புகட்டும் வேலையை மட்டும் செய்யாமல், தமிழ் சமூகத்தின் உழைப்புக்கும், முயற்சிக்கும், இளைஞர்களின் தொழில்முனைவுக்கும் எந்நாளும் பக்க பலமாக இருக்கும் என்பதற்கான மற்றுமொரு முயற்சி இது.
வாருங்கள்... தமிழால் இணைவோம்... அறிவாலும் உழைப்பாலும் உயர்வோம்!