வண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் ‘புரியாத புதிர்’. நம் மனத்தை ஆட்கொண்டிருக்கும் அந்தப் புதிரை அவிழ்க்கும் முயற்சிதான் வா.ரவிக்குமாரின் இந்த படைப்பு. மாற்றுப்பாலினத்தவர் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. பால் புதுமையர் குறித்து நம் மனங்களில் அப்பிக்கிடக்கிற கற்பிதத்தைக் களைவதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம். நம் அனைவரையும் போன்றதுதான் பால் புதுமையரின் வாழ்க்கை. அவர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம், ஆசைகள், கனவுகள் என எல்லாமும் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படுகிற மாற்றத்துக்கு அவர்களை எப்படிக் குற்றவாளியாக்க முடியும்? ஆனால், அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். அவர்கள் ஏதோ செய்யக் கூடாத தவறைச் செய்துவிட்டதைப் போல, அவர்களைப் புறக்கணிக்கிறோம். பெரும்பாலான குடும்பங்கள் அவர்களைக் கைவிடுகின்றன. சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தலும் புறக்கணிப்புமே பால் புதுமையரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.