உற்சாகம் தரும் திருப்புமுனை பிறக்கும்போதே யாரும் வெற்றியாளராகப் பிறப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களையும் திருப்புமுனைகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கிக்கொள்பவர்களே உயரத்தை அடைகிறார்கள். குறிப்பாக, எல்லோருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருப்புமுனை ஏற்படவே செய்கிறது. ஆனால், அதை எல்லோருமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சாதனையாளர்களாக மாறிவிடுவதில்லை. வெகுசிலரே திருப்புமுனையைச் சரியாகப் பயன்படுத்தி, வெற்றியாளர்களாக மாறுகிறார்கள்; உலகத்தை வெல்கிறார்கள்.
எல்லா வயதிலும் திருப்புமுனைகள் வரலாம். ஆனால், இளமைக் காலத்தில் வரும் திருப்புமுனைக்கு தனி மதிப்புண்டு. லட்சிய வேட்கையும் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் விதைக்கும் வயது அதுதான். இன்று ஒவ்வொரு துறையிலும் மிளிரும் ஆளுமைமிக்கவர்களின் இளமைக் காலத்தைத் திருப்பி பார்த்தால், அவர்கள் சந்தித்த தோல்விகள், தடைகள், தடுமாற்றங்களை நீளமாகப் பட்டியலிடலாம்.