ஒலிம்பிக் தொடங்கி உலகில் நடைபெற்று வரும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கம் பெற வேண்டும். முதன்மை பெற வேண்டும் என்று நினைக்காத நாடுகள் இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி சாதனைப் படைத்தவர்கள் எல்லோருமே விளையாட்டு வீரர்கள்தான். அந்தச் சாதனையின் பின்னால், ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் பின்னணியில், அவர்கள் சந்தித்த சவால்கள், தடைகள் ஏராளம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த விளையாட்டில் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அளவே இருக்காது. அந்த விளையாட்டுப் பயணத்தில் சர்வதேச அளவில் அவர்கள் சந்தித்த சுவையான, சவாலான தருணங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி விளையாட்டில் வெற்றிக்கொடிகளை உயரப் பறக்கவிட்டர்கள், அவர்கள் விளையாடிய காலத்தில் நடந்த சுவாரசியமான, சுவையான, சவாலான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்த ‘விளையாட்டாய் சில கதைகள்’ என்ற நூல். இந்த நூல் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய வீரர், வீராங்கனைகளின் வித்தியாசமான, சுவாரசியமான கதைகள், நிகழ்வுகள் என நூறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூல் மற்ற விளையாட்டு நூல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.