
விண்ணளந்த சிறகு
சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்றுவருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீபகாலமாக மட்டுமே கவனம் பெற்றிருப்பது சற்றே முரணானது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.
அந்த வகையில் சுற்றுச்சூழல் சார்ந்த தமிழ் எழுத்துக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர் சு.தியடோர் பாஸ்கரன். 1970-களில் எழுதத் தொடங்கிய அவர் தமிழ்த் திரைப்படங்கள், திரையுலக வரலாறு சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியிருக்கிறார். இந்தக் காலத்தில் சூழலியல் தொடர்பாக ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதிவந்தார். ‘தி இந்து' ஆங்கில செய்தித்தாளில் அவர் எழுதிய பல சுற்றுச்சூழல் கட்டுரைகள் பரவலாக வாசிக்கப்பட்டன.
அஞ்சல் துறை தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பின் தமிழில் அவர் அதிகமாக எழுதத் தொடங்கினார். அப்படி அவர் கூடுதல் கவனம் செலுத்திய துறை, சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் சார்ந்த கவனத்தை நெடிய மரபின் தொடர்ச்சியுடன், நவீன காலப் பின்னணியில் கவனப்படுத்தி எழுதத் தொடங்கினார். அவரே குறிப்பிடுவதுபோல, ஒரு துறை சார்ந்த அக்கறை பரவலாக, அது சார்ந்த சொல்லாடல் தாய்மொழியில் உருவாக வேண்டும். தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து பரவலாவதற்கும் கவனம் பெறுவதற்கும் சு. தியடோர் பாஸ்கரன் முதன்மைக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்துள்ளார்.