ஜப்பான் போன்ற குட்டி நாடுகள்கூட அறிவியலுக்கான நோபல் பரிசுகளை அள்ளும்போது சர் சிவி ராமனுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்தியர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவரை தவிரவும் ஹர் கோவிந்த கொரானா, சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்றிருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினரே தவிர்த்து இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தி அதன் வழியாக உச்சத்தை அடைந்தவர்கள் அல்லர் என்கிற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.அடிப்படையில் அறிவியல் மீது ஆர்வமே ஊட்டப்படாத போது எங்கிருந்து ஆராய்ச்சிவரை மாணவர்கள் செல்லுவார்கள்! உண்மையில் அறிவியல் மீது ஈர்ப்பு ஏற்படுத்த சிறந்த வழி அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்துக் கற்பிப்பதற்கு முன்னதாக அறிவியலார்களின் வாழ்க்கையைக் கதையாக விவரிப்பதே. இதை கனகச்சிதமாகச் செய்யும் புத்தகம் தான் ‘அறிவியல் ஸ்கோப்’. இந்து தமிழ் நாளிதழ் நடத்திவரும் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் தொடராக வெளிவந்தது இப்போது புத்தக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது.