இன்றைய இளைஞர்களில் பலர் படித்தவுடனேயே வேலைக்குச் சென்று விடுகின்றனர். திருமணமாகி கணவன், மனைவி என்று இரண்டு பேருமே கை நிறையச் சம்பாதிக்கின்றனர். ஆனாலும் அத்தகைய பல குடும்பங்களில் மகிழ்ச்சி இல்லை. எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தாங்கள் சம்பாதித்ததை சுதந்திரமாகச் செலவு செய்ய அவர்களால் இயலவில்லை. வேலைக்கு சேர்ந்தவுடனேயே, கடனில் வீடு, கார், நிலம் வாங்கி விடுகின்றனர். இதனால் மாதாந்திர தவணையில் கடன் செலுத்தியாக வேண்டும். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கூட, ஒரு நிறுவனத்தில் வேலையிலிருந்து விலக நேரிட்டால், உடனேயே அடுத்த வேலையில் சேர்ந்தாக வேண்டும். தாமதம் ஏற்பட்டால், அந்த மாத இறுதியில் செலுத்த வேண்டிய மாதாந்திரக் கடன் தவணை அவர்களை கடும் நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்தி விடும்.
இந்த EMI கொடுமைகளிலிருந்து மீண்டு வருவதற்குப் பதிலாக, மீண்டும், மீண்டும் புதிய கடன்களை வாங்கி கடன் வலையில் இருந்து மீள முடியாத அளவுக்கு சிக்கிக் கொள்கின்றனர். இதனால் இன்றைய இளைஞர்களில் பலர் எப்போதும் மனப் பதட்டத்துடனேயே வாழ்வதைப் பார்க்கிறோம்.