சாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறி வதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட மகத்தான யாத்திரிகர்களை பூமி தரிசித்திருக்கிறது. சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தார் உலகின் மூத்த பயணி யுவான் சுவாங். தனது 20 வயதில் புத்தத் துறவியாக மாறிய யுவான் சுவாங், புத்த மத நூல்களைத் தேடி சீனா முழுவதும் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின் வழியே சேகரித்த நூல்களுக்கு இடையில் தென்பட்ட முரண்பாடுகள் தனது தேச எல்லையைக் கடக்க அந்த இளம் துறவியை உந்தித்தள்ளியது.
அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமைகள் பலருண்டு.
அவ்வளவு ஏன் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், புதிய தேசங்கள், கண்டங்கள் கண்டறியப்பட்டதற்கும் வழிகோலியது பயணம்தானே! இது மாதிரியான வேறு பல பயணக் கதைகளின் தொகுப்பாக, ‘கடலுக்கடியில் ரகசிய உரையாடல்’ (சிறகை விரி...உலகை அறி!) புத்தகத்தை தமிழ் திசை பதிப்பகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நூலாசிரியர் சூ.ம.ஜெயசீலன் பயணப் பிரியர். அதிலும் தன்னந்தனியாக பயணம் செய்வதில் பேரார்வம் கொண்டவர். பயணம் மீது கொண்ட காதலுக்கு இணையான ஈடுபாட்டை எழுத்திலும் கொண்டவர். இலங்கை முதல் அமெரிக்காவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்கு கிடைத்த பரவலான வரவேற்புக்கு பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை மூன்று பாகங்கள் ஆகப் பிரித்து முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ மற்றும் இரண்டாம் பாகமாக ‘சிறகை விரி... உலகை அறி!: ஆஸ்விட்ச் வதை முகாமும் சாக்ரடீஸின் கால் தடமும்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை அண்மையில் வெளியிட்டோம். தற்போது ‘கடலுக்கடியில் ரகசிய உரையாடல்’ (சிறகை விரி...உலகை அறி!) மூன்றாம் பாகமாக, இந்நூலை வெளியிடுகிறோம். நிச்சயம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை அந்த நாட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்லும். இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனத்திலும் ஆசை துளிர்க்கச் செய்யும். ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து அழகிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயண வழிகாட்டியாக அமைந்திருக்கிறது இந்த நூல்.