தமிழுக்கும் இளந்தலைமுறைக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளி வேதனை அளிப்பதாக உள்ளது. நாற்பதுகளில் இருப்போரிடம்கூட ஒற்றுப்பிழைகளும் மயங்கொலிப் பிழைகளும் காணப்படும்போது, இளைஞர்களின் நிலையைத் தனியே குறிப்பிடத் தேவை இல்லை. இனியும் இந்நிலை தொடரக் கூடாது; அரசு வேலையின் பொருட்டாவது தமிழ் மொழியில் குறிப்பிட்ட அளவுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்கிற வரவேற்கத்தகுந்த நிலை தமிழக அரசால் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இளைஞர்கள் கசப்பு மருந்தாகக் கருதி ஒதுக்கிவரும் தமிழ் மொழியின் இனிமையான கூறுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் அவர்களுக்கு நேரும் வாடிக்கையான பிழைகளை நட்பார்ந்த ஆசிரியரின் உரிமையோடு திருத்தவும் ’இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஒரு தொடர் வெளியானது. ‘திசைகாட்டி’ இணைப்பிதழில் ஜூன், 2023இல் தொடங்கி 50 வாரங்கள் வெளிவந்த ‘தமிழ் இனிது’ தொடர் அந்தத் தேவையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது. அதை எழுதிய கவிஞர், ஆசிரியர், தமிழ் ஆர்வலருமான நா. முத்துநிலவன் காட்டிய அக்கறைதான் இதற்குக் காரணம்.