இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு. பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும் கூட. இந்து தமிழ் திசை இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர். இந்து தமிழ் நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான இந்து டாக்கீஸில் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைப்படப் பரிமாறியிருக்கிறார்.