மொசார்ட் மூன்று வயதிலேயே இசைக்க ஆரம்பித்துவிட்டார். ஐந்து வயதிலேயே இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்துவிட்டார். 35 வயதுக்குள் காலத்தால் அழியாத இசையை வழங்கி, உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞராகத் திகழ்கிறார்.
வாத்து முட்டைகளை அடைகாப்பதுபோல், தானும் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க வைப்பதாகச் சொன்ன எடிசன், 13 வயதிலிருந்து கருவிகளை உருவாக்க ஆரம்பித்து, பின்னர் உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாறினார். பத்து வயதுக்குள் கணிதத் திறமையை வெளிப்படுத்திய ராமானுஜன், 12 வயதிலேயே கல்லூரிக் கணிதத்தைத் தேடிச் சென்றுவிட்டார். பின்னர் மாபெரும் கணித மேதையாகப் புகழ்பெற்றார்.
இப்படிச் சிலர் குழந்தைகளாக இருக்கும்போதே மேதமையை வெளிப்படுத்தி, பிற்காலத்தில் மாபெரும் மேதைகளாக உருவாகி இருக்கிறார்கள். இன்னும் சிலர் குழந்தைப் பருவத்தில் சாதாரணமானவர்களாக இருந்து, பின்னர் அறிவுத் தேடலினாலும் ஆர்வத்தாலும் மாமேதைகளாக உருவாகி இருக்கிறார்கள். அதனால் மேதைகள் இப்படித்தான் உருவாவார்கள் என்று சொல்ல இயலாது.
ஒரு குழந்தை மற்ற குழந்தைகளைவிடச் சிந்தனையாலோ செயலாலோ வித்தியாசமாக இருக்கிறது என்றால், அந்தக் குழந்தையின் திறமை வெளிப்படுவதற்குப் பெற்றோர் உதவியாக இருக்கலாம். அப்படி அல்லாமல் ஒரு குழந்தையை மேதையாக உருவாக்குகிறேன் என்று பெற்றோர் முயற்சி செய்யக் கூடாது. ஏனென்றால், மேதைகளை உருவாக்க முடியாது.
இளம் வாசகர்களுக்குப் பொதுவாக பெரியவர்களையே உதாரணமாகச் சொல்லிக் கொடுக்கிறோம். அவர்களுக்கு, அவர்கள் வயதுக்கு ஏற்ற மேதைகளை அறிமுகம் செய்வதற்காகவே இந்தத் தொடர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் வெளியிடப்பட்டது. இதுவரை அதிகம் அறியப்படாத குழந்தை மேதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார் இஸ்க்ரா.