நம்மூரில் சிறுவர்களுக்கு தொட்டால் சிணுங்கி தாவரம் மீது எப்போதும் பெரும் ஈர்ப்பு உண்டு. இலையை தொட்டவுடன் மூடிக்கொள்ளும் அந்தத் தாவரம் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை தந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற மனிதனை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் மனிதர்களை பெரும் வியப்படையச் செய்தன. உயிரினங்களின் தோற்றம் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்த சார்லஸ் டார்வின், பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய புத்தகத்தை 1875 ஜூலை 2ஆம் தேதி வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி நூலைப் படித்த பலரும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். இந்நூலை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான புனைவுகள் வந்தன. மனிதர்களைக் கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய கற்பனையான பல நாவல்களை எழுதினர். ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் வந்தன.
இந்நிலையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் பற்றியும், அந்தத் தாவரங்கள் பற்றிய உண்மைகள், கற்பனைகள், புனைவுகள் பற்றியும் ‘அசைவம் உண்ணும் தாவரங்கள்’ என்ற இந்நூலின் மூலம் ஏற்காடு இளங்கோ விளக்கமாகக் கூறியிருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு தாவரவியல் ஆய்வாளர் என்பதாலும், பூச்சியுண்ணும் தாவரங்கள் இருக்கும் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பதாலும், இந்நூலை நுட்பமான பல தகவல்களோடு அவர் எழுதியிருக்கிறார்.