மருத்துவத் துறை என்பது சேவைத் துறையாகக் கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் உலகம் முழுவதும் பெரும் வணிகம் நடைபெறும் துறையாக இந்தத் துறைதான் உள்ளது. இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள், மனிதனின் நல்வாழ்வில் பெரும் சரிவை ஏற்படுத்திவிட்டன. இதனால் உலகெங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழல்கள் காரணமாக உடல் நலம் பராமரிப்பு என்பது பெரும் சவாலானதாக மாறியுள்ளது. சிறு வயதுக்காரர்கள் கூட பெரும் நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருவதைப் பார்த்து வருகிறோம்.‘நலமோடு வாழ்தல்’ என்பது இயல்பாக இருந்த நிலை மாறிவிட்டது. இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போல உடல் நலம் காக்க நாம் நிச்சயமாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, சற்று மெனக்கெடு செய்தால்தான் நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.
இப்படிப்பட்ட சூழலில், உணவு முறைகள் மூலம் நம் உடல் நலம் காக்க எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதற்கு டாக்டர் விக்ரம் குமார் எழுதியுள்ள ‘அடுப்பங்கரையில் ஆரோக்கியம்’ என்ற இந்நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.