
அந்தமானின் அழகுக்குப் பின்னால் உள்ள அறிவியல்
முனைவர் பெ.சசிக்குமார், இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருபவர். M. ஜோதிமணி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியாளர். இந்த இணையரின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கிறது ‘அந்தமானின் அழகுக்குப் பின்னால் உள்ள அறிவியல்’ புத்தகம்.
சுற்றுலாவுக்குச் செல்லும் இடங்களின் புற அழகை வெளிப்படுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டு ஏராளமான புத்தகங்கள் ஏராளமான இடங்களைப் பற்றி வெளிவந்துள்ளன. ஆனால், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நூலாசிரியர்கள் சுற்றுலாவுக்குச் சென்றதை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், வழக்கமான சுற்றுலா தொடர்பான புத்தகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் வரலாற்றுப் பின்னணி, புவியியல் சார்ந்த முக்கியத்துவம், அங்கிருக்கும் பூர்வ குடிகள், அவர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், பலவிதமான உயிரினங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் தீவுகளைச் சுற்றியிருக்கும் கடல், பல்லுயிர் பன்மைச்சூழலைப் பாதுகாப்பதில் எப்படிப்பட்ட முக்கியமான பணிகளைச் செய்கின்றது என்பது போன்ற அறிவியல் உண்மைகளை விரிவாக விளக்குகின்றது இந்தப் புத்தகம்.