கல்வி என்னும் ஆயுதம் கிடைக்கப் பெறும் ஒரு மனிதன் எவ்வாறு பேராற்றல் மிக்கவன் ஆகிறான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் இந்நூலை எழுதியுள்ள ரவிச்சந்திரன் சோமு. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளார் ரவி. தன்னுடைய இந்த உயர் நிலைக்கு அடித்தளமிட்ட பள்ளி வாழ்க்கை பற்றி ‘அரசு பள்ளி To அமெரிக்கா’ என்ற இந்நூலில் அழகுபட விவரித்துள்ளார்.
குறிப்பாக தொடக்கக் கல்வி பயின்ற வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, உயர் நிலை வகுப்புகள் பயின்ற மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைக் கல்வி பெற்ற மன்னார்குடியில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தன்னை செதுக்கி, அறிவூட்டி, சான்றோனாக்கிய ஆசிரியர்கள் பற்றியும், நல்ல மாணவர்களை உருவாக்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிச் சிறப்பு பற்றியும் நினைவுகூர்கிறார் நூலாசிரியர்.
இன்றைய நவீனங்கள் ஏதுமில்லா 40, 50 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி வகுப்பறைகளில், சான்றாண்மைமிக்க மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் பற்றி அறியச் செய்வதன்மூலம், இன்றைய ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உத்திகளில் புதிய திசைவழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.