
அறவாழ்வின் அடையாளம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது.
ஆர்.நல்லகண்ணுவின் பெருமை மிகுந்த வாழ்க்கைத் தடத்தை, ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.
1948இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், ஏராளமான சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் ‘நெல்லை சதி வழக்கு’ வரலாற்றில் பதிவான முக்கிய வழக்காகும். இந்த வழக்கில்தான் நல்லகண்ணு கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் நல்லகண்ணுதான் நீண்ட காலம் சிறையில் இருந்தவர்.
நல்லகண்ணுவின் இளம் வயதுப் போராட்டங்களையும், அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகளையும் அறியும் அனைவருக்கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உருவாகும் என்பது நிச்சயம். குறிப்பாக, அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய வரலாற்றைப் படிக்கும் இளம் தலைமுறையினர், மக்களுக்காகத் தொண்டு செய்ய இப்படியும் ஒரு உறுதிமிக்க தலைவர் இருக்க முடியுமா என்று வியப்பில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
அரசியலில் கொள்கை மாறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், சாமானிய மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில் அரசியல் பார்க்காமல் எல்லோரும் இணைந்து ஓரணியில் மக்களுக்காகப் போராட வேண்டும் என்பதில் நம் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நல்லகண்ணு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் மட்டுமில்லாமல், பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் அவர் பங்கெடுத்திருக்கிறார். கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக அவரது காலடி படாத ஊர்களே இல்லை எனலாம்.
தமிழ்நாட்டின் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை எழுதும்போது, நல்லகண்ணுவைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. ஏனெனில், அவருடைய வாழ்க்கை என்பது தமிழ்நாட்டின் நூறாண்டு கால வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், விவசாயம், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் தமிழகத்தின் முன்னோடிகளோடு இணைந்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்தவர் நல்லகண்ணு. அரசியல் கட்சிக்கான வேலிகளையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டின் பொதுத் தலைவராகப் பரிணமித்திருக்கும் மாமனிதர் அவர்.
தமிழ்நாட்டின் ஆளுமைகள் பலரது கட்டுரைகள், நேர்காணல்கள் என நல்லகண்ணு பற்றிய ஏராளமான அரிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகள் அனைத்தும், நல்லகண்ணுவின் தன்னலமற்ற பணிகளுக்கு எந்நாளும் புகழ்மாலை சூட்டும்.