‘அளவோடு உண்டால் அரிசியும் அமிர்தம்தான்’ என்ற கட்டுரை, சமகாலத்தில் அரிசி உணவைப் பற்றி நிலவி வரும் தேவையற்ற அச்சங்களையும், அதன் பின்னால் இருக்கும் யதார்த்தமான உண்மைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது. அரிசி சாதம் உடலைப் பருமனாக்கும் என்ற பொதுவான கருத்தை நூலாசிரியர் மிக லாவகமாக மறுக்கிறார். நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்குக் காரணம் அரிசி அல்ல, அவர்களின் அபரிமிதமான உடல் உழைப்புதான் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், பிரச்சினை உணவில் இல்லை, நம்முடைய வாழ்க்கை முறையில்தான் இருக்கிறது என்பதை உணர வைக்கிறார்.
‘நினைத்தாலே இனிக்கும்’ என்று தொடங்கும் சர்க்கரை குறித்த கட்டுரை, வாசிக்க இனிமையாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் கசப்பான உண்மைகளாகவும், பலருக்கும் அதிர்ச்சி அளிப்பவையாகவும் உள்ளன. “நமக்கு எது பிடிக்குமோ அதை அதிகமாகச் சாப்பிடக்கூடாது; எது பிடிக்காதோ அதை அதிகமாகச் சாப்பிட வேண்டும்” என்ற நூலாசிரியரின் அறிவுரை, இன்றைய தலைமுறைக்கு அவசியமான அறிவுரையாகும்.