அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பற்பசை முதல் பயணிக்கும் வாகனங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கும். அந்த நிறுவனங்களின் பின்னணியை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டிருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு.
அந்த நிறுவனங்கள் எப்படித் தொடங்கப்பட்டன, அந்த நிறுவனம் எத்தகைய சவால்களை சந்தித்து இன்னமும் சாதித்துக் கொண்டிருக்கின்றன.. என்பதை எல்லாம் ஆங்கிலத்தில் நூலாகப் பதிப்பித்து ஆவணமாக்கியிருக்கின்றனர். அப்படிப்பட்ட சாதனை நிறுவனங்கள், அதனைக் கட்டி எழுப்பிய சாதனையாளர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப. மீனாட்சி சுந்தரம்.
இருபத்தைந்து சாதனையாளர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் இந்தியாவில் முத்திரை பதித்தவர்களின் கதைகளும் உண்டு. மேலை நாடுகளில் முத்திரை பதித்தவர்களின் கதைகளும் உண்டு. ஐஸ்கிரீம் விற்பனையில் சாதித்தவரின் போராட்டமும் பதிவாகியிருக்கிறது, பயணிகளுக்கான விமான சேவையில் உச்சம் தொட்டவரின் சாதனைப் பக்கமும் இடம்பெற்றிருக்கிறது.