இன்றைய காலக்கட்டத்தில் இளம் மனங்களில் அன்பை விதைக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கிறது. மாயாபஜாரில் மருதன் எழுதிய கட்டுரைகள் மனிதர்கள் மீதும், பிற உயிரினங்கள் மீதும், இயற்கையின் மீதும் அன்புகொள்ளச் சொல்கின்றன. எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரிடமும் நட்புகொள்ளவும் எளியவர்களிடம் கருணையும் காட்டச் சொல்கின்றன.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிறந்த பண்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, கற்பனையில் விவரித்து, வசீகரமான நடையில் எழுதும் மருதனின் எழுத்துகளுக்கு இளம் மாணவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசகர்களாகிவிடுகிறார்கள்!
உதாரணத்துக்கு, ‘சொல் வேண்டாம், அமைதி போதும்’ கட்டுரையில், சார்லி சாப்ளின் ஆஸ்கர் விருது வாங்குவதற்காக மேடை ஏறினார். கரவொலி நிற்கவே இல்லை. அவரால் ஒரு வார்த்தைப் பேச இயலவில்லை. ‘சாப்ளின், நீ ஒரு வார்த்தைக்கூடப் பேச வேண்டியதில்லை. உன்னுடைய அமைதி, சொற்களைக் காட்டிலும் ஆழமானது. உன் மகிழ்ச்சி, போராட்டம், கனவு, விருப்பம், அரசியல் அனைத்தையும் சொற்களின்றி உணர்த்திவிட்டாய்! உன்னோடு உரையாடுவதற்கு எங்களுக்கும் சொற்கள் தேவைப்படவில்லை. நாங்கள் உன்னோடு இருப்போம். நீ எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வாய்’ என்று மக்கள் கரவொலி மூலம் சொல்வதாக அமைந்த கட்டுரை, அன்புக்குச் சொற்கள் தேவை இல்லை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிடுகிறது!